

பேரன்புடையீர் வணக்கம்,
பாரத பூமி தொன்மையான ஹிந்து சமயத்தைக் கொண்டது, இந்நாட்டு மக்களின் வாழ்க்கையின் முறையே அறத்தையும், ஆன்மீகத்தையும் அடிப்படையாகக் கொண்டது. இந்த தேசத்தின் ஆன்மாவாக திருக்கோவில்கள் விளங்குகின்றது என்றால் அது மிகையாகாது.
நாடு முழுவதும் நாயன்மார்கள், ஆழ்வார்களால் பாடப் பெற்ற ஸ்தலங்கள், ஜோதிர்லிங்கங்கள், சக்தி பீடங்கள், படை வீடுகள், திவ்ய தேசங்கள், அட்டவீரட்டான ஸ்தலங்கள், பஞ்சபூத க்ஷேத்ரங்கள் என பரவி இந்த நாடு முழுவதும் புனித பூமியாக, மோட்ச பூமியாக காட்சியளிக்கின்றது.
அதனினும் தமிழகம் என்றாலே நெடிதுயர்ந்த கோபுரங்கள், நீண்ட பிரகாரங்கள், விசாலமான மாட வீதிகள், ரத வீதிகள், சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட மகாமண்டபங்கள் என்பதே நம் சிந்தையில் தோன்றுகின்றன.
காலத்தை வென்று நிற்கும் இத்திருக்கோவில்கள் இறைவனாலும் மகான்களாலும் மன்னர்களாலும் தோற்றுவிக்கப்பட்டு நமது முன்னோர்கள் மூலம் நமக்கு விட்டுச் சென்ற செல்வங்களாகும்.
திருக்கோவில்கள் நமது சமுதாயத்தின் பரம்பரை சொத்து. இதனை பாதுகாக்க பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு தரப்பினரும் ஆண்டி முதல் அரசன் வரை உடல், பொருள், ஆவி உள்ளிட்ட தியாகங்களை செய்துள்ளனர். அவ்வகையில் இவற்றை கட்டி காப்பது இதன் புனிதத்தை பேணுவது, இதை சார்ந்த பணிகளை செய்வது நமது தார்மீக கடமையாகும். அதற்காக துவக்கப்பட்டது தான் ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் ஆகும்.
1. ஒவ்வொரு திருக்கோயில்களிலும் பக்தர்களை ஒன்றினைத்து ஆலயப்பணிகளில் முழுமையாக ஈடுபடுத்துதல்.
2. திருக்கோயில்களில் நித்திய பூஜைகள் செவ்வன நடைபெற பாடுபடுதல்.
3. திருவிழாக்காலங்களில், தண்ணீர்ப்பந்தல் வைத்தல், அன்னதானம் வழங்குதல், சுகாதாரம் பேண பாடுபடுதல், தேரோட்டம், தெப்பத்திருவிழா நன்றாக நடக்க தொண்டர்கள் அணி உருவாக்குதல்.
4. திருக்கோயில்களுக்கு தினசரி சென்று வழிபடுவதுடன் உடலால் உழைத்து உழவாரப்பணி செய்து கடவுளருளுக்கு நம்மை மேலும்தகுதியாக்கிக் கொள்ளுதல்.
5. நந்தவனங்களை பராமரித்து, தெய்வீக மூலிகைச் செடிகள், தெய்வீக மரங்கள், தெய்வீக புஷ்பச் செடிகள் வளர்த்தல், திருக்கோயில் ஸ்தல விருக்ஷங்களை பாதுகாத்து வளர்த்தல்.
6. திருக்கோயில் குளங்களின் தீர்த்தம் மகிமை வாய்ந்தது. ஆகையால் அதன் தூய்மையை பாதுகாத்து திருக்குளங்களை நன்றாக பராமரித்தல்.
7. திருக்கோவில்களின் விக்கிரகங்கள், சிற்பங்கள்,திருவாபரணங்கள், சொத்துகள், நிலங்கள் இவற்றை பாதுகாக்க உதவுதல்.
8. திருக்கோயில்களில் திருவிளக்கு பூஜை, கூட்டு வழிபாடு, சத்சங்கம், பஜனை, சமய சொற்பொழிவுகள் நன்றாக நடத்தி பக்தி மணம் கமழும் ஸ்தலங்களாக பொலிவடையச் செய்தல். திருக்கோயில்களில் இளைய தலைமுறையினருக்காக தர்மத்தையும், சமயத்தையும், பண்பாட்டையும் அறிய ஆன்மீக வகுப்புகள் நடத்துதல்.
9. திருக்கோயில்களில் ஆழ்வார்கள், நாயன்மார்கள், சித்தர்கள், முனிவர்கள், மகான்கள் இவர்களின் திருநட்சத்திரத்தன்று வழிபாடு செய்து அவரவர்களுடைய திருக்குணங்களை நாம் பெற வேண்டுதல்.
10. திருக்கோயில்களின் கலைஞர்களை ஆதரித்து பாரம்பரிய தெய்வீக கலைகளை சிதையாமல் வளர்த்தல்.
11. திருக்கோயில்களில் அறங்காவலர்கள், அதிகாரிகள், பணியாளர்கள் ஆகியோருடன் பக்தர்களுக்கு இணக்கமான சூழ்நிலை உருவாக பாடுபடுதல்.
12. திருக்கோயில்களை இது போன்ற பல வகைகளில் பேணிப் பாதுகாத்து அவற்றின் மகத்துவத்தையும், புனிதத்தையும் காப்பாற்றி நமது பண்பாட்டின் அடையாளச் சின்னங்களை வரும் தலைமுறையினருக்கு விட்டுச் செல்லுதல்..
1. ஹிந்து ஆலயங்களை ஒரு சுய நிர்வாக [சமுதாய] அமைப்பின் கீழ் கொண்டுவர பாடுபடுவது.
2. திருக்கோயில்களுக்கும், மக்களுக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்படுத்துவது.
3. மக்களிடையே சமய, சமுதாய, ஆலய நலன்களைப் பாதுகாக்கும் உரிமை வேட்கையையும் விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்துவது.
4. ஆலயங்கள் தெய்வத்தன்மை நிறைந்த புனித இடமாகவும், சமய, சமூக வளர்ச்சி, ஆன்மீகம், கலை, கலாச்சார, பண்பாடு, சமுதாய ஒற்றுமை, ஆகியவைகளின் கேந்திரமாகவும் செயல்படச் செய்வது.
5. ஆலயச் சொத்துக்களை சுயநலமிகளும், பிறமதத்தினரும் சுரண்டுவதை தடுத்தல்.
6. ஆலயங்களைச் சந்தைக் கடையாக மாற்றுவதை தடுத்தல்.
7. ஆலயக்கணக்குகளை பகிரங்கமாக பொதுமக்களுக்கு தெரிவிக்கும்படி வற்புறுத்தல்.
8. நமது ஹிந்து சமயம், ஹிந்து ஆலயம், ஹிந்து கடவுளர்களை இழிவுபடுத்தும் எந்த செயல்களையும் எதிர்த்துப் போராடுவது.
9. பின் தங்கிய பகுதி வாழ் மக்களிடையே சமய உணர்வு வளர்ப்பது.
10. ஆலய சொத்துக்களிடமிருந்து உரிய வருமானம் கிடைக்கச் செய்தல்.
11. ஆலய நிலங்களுக்கு, சோஷலிச பாணி சட்டங்களிலிருந்து விதிவிலக்கு கிடைக்க பாடுபடுதல்.
12. ஆலய ஊழியர்களின் நிலை உயர பாடுபடுதல்.